Tuesday, November 29, 2011

முஹர்ரம் - தொடர் 3


  ” ஏகத்துவம் மாத இதழில் முன்பு வெளியான கட்டுரையினை வாசகர்களுக்காக இப்போது இங்கே வெளியிடுகிறோம்”

கடல் பிளந்தது! கொடியவன் கொல்லப்பட்டான்!

அப்பூமியில் பலவீனர்களாகக் கருதப்பட்டோர் மீது அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அப்பூமிக்கு உரிமையாளர்களாக்கவும், அப்பூமியில் அவர்களுக்கு ஆதிக்கத்தை ஏற்படுத்தவும், ஃபிர்அவ்ன், ஹாமான் மற்றும் அவ்விருவரின் படையினரும் எதை அஞ்சினார்களோ அதை அவர்களுக்குக் காட்டவும் நாடினோம். (அல்குர்ஆன் 28:5,6)

காலையில் அவர்களைப் பின் தொடர்ந்தனர். இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது ''நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்'' என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். ''அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்'' என்று அவர் கூறினார்.

''உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.

அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம். மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம். (அல்குர்ஆன் 26:60 - 66)

அழியாத அத்தாட்சி

உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். இஸ்ராயீலின் மக்களைச் சிறந்த நிலப்பரப்பில் குடியமர்த்தினோம்.  (அல்குர்ஆன் 10:92 - 93)

படைத்தவனின் வாக்குறுதி பலித்த நாள்

பனூ இஸ்ரவேலர்களை ஃபிர்அவ்ன் கொடுமைப் படுத்திய போது அவர்கள் மூஸா (அலை) அவர்களிடம் சென்று முறையிட்டனர். அப்போது மூஸா (அலை) அவர்கள் கூறிய வார்த்தைகள் இதோ:

''உங்கள் இறைவன், உங்கள் எதிரியை அழித்து உங்களைப் பூமியில் (அவர்களுக்குப்) பகரமாக்கி 'எவ்வாறு செயல்படுகின்றீர்கள்' என்பதைக் கவனிப்பான்'' என்று (மூஸா) கூறினார். (அல்குர்ஆன் 7:129)

பலவீனர்களாகக் கருதப்பட்டு வந்த சமுதாயத்தை பாக்கியம் செய்த பூமியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு உரிமையாளர் களாக்கினோம். இஸ்ராயீ­ன் மக்கள் பொறுமையைக் கைக்கொண்டதால் உமது இறைவனின் அழகிய வாக்கு அவர்கள் விஷயத்தில் முழுமையாக நிறைவேறியது. ஃபிர்அவ்னும் அவனது சமுதாயத்தினரும் தயாரித்தவற்றையும், அவர்கள் உயரமாக எழுப்பியவற்றையும் அடியோடு அழித்தோம். (அல்குர்ஆன் 7:137)

மூஸா (அலை) அவர்கள் மூலமாக இறைவன் பனூ இஸ்ரவேலர்களுக்கு அளித்த அந்த வாக்குறுதி நிறைவேறிய அந்த நன்னாள் தான் ஆஷூரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாளாகும். அந்தச் சிறப்பு நாள் இன்று முஸ்லிம்களால் கருப்பு நாளாகச் சித்தரிக்கப்பட்டு விட்டது.

திருக்குர்ஆன் கூறும் இந்த மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நாள் கர்பலா நிகழ்ச்சியில் கரைந்து போய் விட்டது. ஆஷூரா நாள் என்றாலே ஹஸன், ஹுசைன் (ரலி) அவர்களுக்குச் சொந்தமான நாள் என்பது போன்ற மாயை மக்களிடம் தோற்றுவிக்கப்பட்டுவிட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தக் காரணத்திற்காக இந்த நாளை நோன்பு நோற்று கண்ணியப்படுத்தச் சொன்னார்களோ அந்த உண்மையான நோக்கத்தை உணர்ந்து, அல்லாஹ் கூறும் அந்த உண்மை வரலாற்றை நினைவு கூர்வோமாக!

நன்றி: ஏகத்துவம் மாத இதழ்

No comments:

Post a Comment