” ஏகத்துவம் மாத இதழில் முன்பு வெளியான கட்டுரையினை வாசகர்களுக்காக இப்போது இங்கே வெளியிடுகிறோம்”
முஹர்ரம்
  முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள் சிறந்த மகத்தான ஒரு நாளாகும். ஆஷூரா நாள் என்றழைக்கப்படும் அந்த நாள் எப்படிப்பட்டது? அது பற்றி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பு இவ்வாறு சொல்கின்றது.
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். ''இது என்ன நாள்?'' என்று கேட்டார்கள்.  ''இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்'' என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள் ''நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன்'' என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று தம் தோழர்களுக்கும்  நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 3397
இந்தச் சம்பவம் நமக்கு முற்காலத்தில் நடந்த ஒரு வரலாற்றை நினைவூட்டுகின்றது. அது என்ன?
பனீ இஸ்ரவேல் சமுதாயத் தவர்களைக் கொத்தடிமைகளாக்கி, கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த கொடுங்கோலன் ஃபிர்அவ்ன் என்பவனிடமிருந்து மூஸா (அலை) அவர்கள் அந்தச் சமுதாயத்தை மீட்ட வரலாறு தான் அது.
எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு வழங்கப்பட்ட ஆட்சியதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்தவன். நானே மகத்தான இறைவன் என்று பிரகடனப்படுத்தியவன். இவன் தனது நாட்டின் மக்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் எனப் பிரித்து ஆட்சி செய்தான். அவனது ஆட்சியில் கொத்தடிமைகளாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டவர்கள் இஸ்ரவேல் சமுதாயத்தினர்.
இந்த அக்கிரமக்கார அரசனிடம் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர் தான் மூஸா (அலை) அவர்கள். ஃபிர்அவ்னிடத்தில் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்வதோடு, ஒடுக்கப்பட்ட இஸ்ரவேல் சமுதாயத்துக்காக உரிமைக் குரல் கொடுத்து, அம்மக்களை அடிமைத் தளையிலிருந்து மீட்கும் மாபெரும் பொறுப்பு மூஸா நபிக்கு வழங்கப்பட்டிருந்தது.
அல்லாஹ் தனது திருமறையில் பல்வேறு இடங்களில் அந்த வரலாற்றை எடுத்துக் கூறுகின்றான். திருக்குர்ஆன் கூறும் அந்த வரலாற்றை இப்போது பார்ப்போம்.
ஃபிர்அவ்னின் சர்வாதிகார ஆட்சி
மூஸா மற்றும் ஃபிர்அவ்ன் பற்றிய உண்மையான செய்தியை நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்காக உமக்கு கூறுகிறோம். ஃபிர்அவ்ன் பூமியில் ஆணவம் கொண்டிருந்தான். அதில் உள்ளவர்களைப் பல பிரிவுகளாக்கி அவர்களில் ஒரு பிரிவினரைப் பலவீனர்களாக ஆக்கினான். அவர்களில் ஆண் மக்களைக் கொன்றான். பெண்(மக்)களை உயிருடன் விட்டான். அவன் குழப்பம் செய்பவனாக இருந்தான். (அல்குர்ஆன் 28:3,4)
மூஸா நபியின் பிறப்பு
பனூ இஸ்ரவேலர்களை ஃபிர்அவ்ன் இவ்வாறு கொடுமைப் படுத்திக் கொண்டிருந்த போது, மூஸா (அலை) அவர்கள் பிறக்கின்றார்கள். மூஸா (அலை) அவர்கள் பிறந்த கால கட்டத்தில் ஃபிர்அவ்ன் அந்தச் சமுதாயத்தின் ஆண் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தான்.
ஆனால் அல்லாஹ்வின் அற்புதம்! எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்ற ஃபிர்அவ்ன் பிற்காலத்தில் எதிரியாக வந்து, அவனை அழிக்கப் போகும் மூஸா (அலை) அவர்களை மட்டும் கொல்லாமல் விட்டு விட்டான்.
மூஸா நபியவர்கள் பிறந்தவுடன் ஃபிர்அவ்ன் அவனைக் கொன்று விடுவான் என்று எண்ணி அஞ்சிக் கொண்டிருந்த மூஸா நபியின் தாயாருக்கு அல்லாஹ் ஒரு செய்தியை உள்ளுணர்வாக அறிவித்துக் கொடுத்தான். அதன் அடிப்படையில் அவர்கள் மூஸா நபியவர்களை ஒரு பெட்டியில் வைத்து, கடலில் போட்டு அனுப்பி விடுகின்றார்கள்.
அதன் பின் அந்தக் குழந்தை (மூஸா நபி) ஃபிர்அவ்னிடமே வந்து சேர்கின்றது. இந்த வரலாற்றை அல்லாஹ் பின் வருமாறு கூறுகின்றான்.
தன் பகையை தானே வளர்த்த ஃபிர்அவ்ன்
அறிவிக்கப்பட வேண்டியதை உமது தாயாருக்கு நாம் அறிவித்ததை எண்ணிப் பார்ப்பீராக! இவரை (இக்குழந்தையை) பெட்டிக்குள் வைத்து அதைக் கடலில் போடுவாயாக! கடல் அவரைக் கரையில் சேர்க்கும். எனக்கும் இவருக்கும் எதிரியானவன் இவரை எடுத்துக் கொள்வான்'' (என்று உமது தாயாருக்கு அறிவித்தோம்). எனது கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக உம் மீது என் அன்பையும் செலுத்தினேன்.  உமது சகோதரி நடந்து சென்று, ''இக்குழந்தையைப் பொறுப் பேற்பவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்டார். எனவே உமது தாயின் கண் குளிர்வதற்காகவும், அவர் கவலைப் படாமல் இருப்பதற்காகவும் அவரிடம் உம்மைத் திரும்பச் சேர்த்தோம். நீர் ஓர் உயிரைக் கொன்றிருந்தீர். உம்மைக் கவலையிலிருந்து காப்பாற்றினோம். உம்மைப் பல வழிகளில் சோதித்தோம். மத்யன் வாசிகளிடம் பல வருடங்கள் வசித்தீர். மூஸாவே! பின்னர் (நமது) திட்டப்படி வந்து சேர்ந்தீர். (அல்குர்ஆன் 20: 38 - 40)
''இவருக்குப் பாலூட்டு! இவரைப் பற்றி நீ பயந்தால் இவரைக் கடலில் போடு! பயப்படாதே! கவலையும் படாதே! அவரை உன்னிடம் நாம் திரும்ப ஒப்படைத்து, அவரைத் தூதராக ஆக்குவோம்'' என்று மூஸாவின் தாயாருக்கு அறிவித்தோம்.
தங்களுக்கு எதிரியாகவும், கவலையாகவும் ஆவதற்காக ஃபிர்அவ்னின் குடும்பத்தார் அவரை எடுத்துக் கொண்டனர். ஃபிர்அவ்னும், ஹாமானும் அவ்விருவரின் படையினரும் தப்புக் கணக்குப் போட்டு விட்டனர்.
''எனக்கும், உமக்கும் இவர் கண் குளிர்ச்சியாக இருக்கட்டும்! இவரைக் கொல்லாதீர்கள்! இவர் நமக்குப் பயன்படலாம். அல்லது இவரை மகனாக்கிக் கொள்ளலாம்'' என்று ஃபிர்அவ்னின் மனைவி கூறினார். அவர்கள் (விளைவை) அறியாதிருந்தனர்.
மூஸாவின் தாயாரின் உள்ளம் வெறுமையானது. அவரது உள்ளத்தை நாம் பலப்படுத்தியிருக்கா விட்டால் அவர் (உண்மையை) வெளிப் படுத்தியிருப்பார். அவர் நம்பிக்கை கொண்டோரில் ஒருவராக ஆவதற்கு இவ்வாறு செய்தோம்.
''நீ அவரைப் பின்தொடர்ந்து செல்!'' என்று மூஸாவின் சகோதரியிடம் (அவரது தாயார்) கூறினார். அவர்கள் அறியாத வகையில் தொலைவிலிருந்து அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பாலூட்டும் பெண்களை முன்பே அவருக்கு (மூஸாவுக்கு) விலக்கியிருந்தோம். ''உங்களுக்காக இக்குழந்தையைப் பொறுப்பேற்று வளர்க்கும் ஒரு குடும்பத்தினரைப் பற்றி நான் உங்களுக்குக் கூறட்டுமா? அவர்கள் இவரது நலனை நாடுபவர்கள்'' என்று அவள் கூறினாள்.
அவரது தாயார் கவலைப் படாமல் மனம் குளிரவும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மை என்பதை அவர் அறிவதற்காகவும் அவரிடம் அவரைத் திரும்பச் சேர்த்தோம். எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 28:7 - 13)
அறியாமல் செய்த தவறு
அவர் பருவமடைந்து சீரான நிலையை அடைந்த போது அவருக்கு அதிகாரத்தையும், கல்வியையும் அளித்தோம். நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.
அவ்வூரார் கவனமற்று இருந்த நேரத்தில் அவர் அங்கே சென்றார். அங்கே இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவர் இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இவரது எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர் எதிரிச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி தேடினார். உடனே மூஸா ஒரு குத்து விட்டார். உடனே அவன் கதை முடிந்து விட்டது. ''இது ஷைத்தானின் வேலை. அவன் வழி கெடுக்கும் தெளிவான எதிரி'' என்றார்.
''என் இறைவா! எனக்கே நான் தீங்கு இழைத்து விட்டேன். எனவே என்னை மன்னிப்பாயாக!'' என்றார். அவன் அவரை மன்னித்தான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
 ''என் இறைவா! நீ எனக்கு அருள்புரிந்ததால் குற்றவாளிகளுக்கு உதவுபவனாக இனிமேல் இருக்க மாட்டேன்'' என்றார்.
அந்நகரத்தில் பயந்தவராக (நிலைமையை) காலையில் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது முதல் நாள் அவரிடம் உதவி தேடியவன் (மறுபடியும்) உதவி தேடி அழைத்தான். ''நீ பகிரங்கமான வழிகேடனாக இருக்கிறாய்'' என்று அவனிடம் மூஸா கூறினார்.
பின்னர் இருவருக்கும் எதிரியாக இருந்தவனை அவர் பிடிக்க முயன்ற போது ''மூஸாவே! நேற்று ஒருவரை நீர் கொலை செய்தது போல் என்னைக் கொல்ல நினைக்கிறீரா? இப்பூமியில் ஆதிக்கம் செலுத்துபவராக ஆக வேண்டும் என்றே நீர் விரும்புகிறீர். சீர்திருத்தம் செய்பவராக ஆக நீர் விரும்பவில்லை'' என்று அவன் கூறினான்.
அந்நகரத்தின் கடைக் கோடியிலிருந்து ஒரு மனிதர் விரைந்து வந்து ''மூஸாவே! பிரமுகர்கள் உம்மைக் கொன்று விட ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே வெளியேறி விடுவீராக! நான் உமது நலம் நாடுபவன்'' என்றார்.
பயந்தவராக கவனத்துடன் அங்கிருந்து வெளியேறினார். ''என் இறைவா! அநீதி இழைக்கும் கூட்டத்தை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக!'' என்றார். (அல்குர்ஆன் 28:14 - 21)
மணம் முடித்தல்
அவர் மத்யன் நகருக்கு வந்த போது ''என் இறைவன் எனக்கு நேர் வழி காட்டக்கூடும்'' என்றார்.
மத்யன் நகரின் நீர்த்துறைக்கு அவர் வந்த போது மக்களில் ஒரு கூட்டத்தினர் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்ததைக் கண்டார். அவர்களை விட்டு இரண்டு பெண்கள் ஒதுங்கி நிற்பதையும் கண்டு ''உங்கள் விஷயம் என்ன?'' என்று கேட்டார். ''மேய்ப்பவர்கள் விலகும் வரை நாங்கள் தண்ணீர் இறைக்க முடியாது. எங்கள் தந்தை வயதான முதியவர்'' என்று அவர்கள் கூறினர்.
அவர்களுக்காக அவர் தண்ணீர் இறைத்துக் கொடுத்தார். பின்னர் நிழலை நோக்கிச் சென்று, ''என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ளவனாக இருக்கிறேன்'' என்றார்.
அவர்களில் ஒருத்தி வெட்கத்துடன் நடந்து அவரிடம் வந்து, ''நீர் எங்களுக்குத் தண்ணீர் இறைத்துத் தந்ததற்குரிய கூலியை உமக்குத் தருவதற்காக என் தந்தை உம்மை அழைக்கிறார்'' என்றாள். அவரிடம் வந்து (தன்னைப் பற்றிய) செய்திகளைக் கூறினார். ''நீர் பயப்படாதீர்! அநீதி இழைக்கும் கூட்டத்திடமிருந்து நீர் வெற்றி பெற்று விட்டீர்'' என்று அவர் கூறினார்.
''என் தந்தையே! இவரைப் பணியில் சேர்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் வலிமையான நம்பகமானவரே நீங்கள் பணியில் சேர்ப்பதற்கு ஏற்றவர்'' என்று அவர்களில் ஒருத்தி கூறினாள்.
''எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப் படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மண முடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சேர்ந்தது. நான் உமக்குச் சிரமம் தர விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்'' என்று அவர் கூறினார்.
''இதுவே எனக்கும், உமக்கும் இடையே உள்ள ஒப்பந்தம். இரண்டு காலக் கெடுகளில் எதை நான் நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை. நாம் பேசிக் கொண்டதற்கு அல்லாஹ்வே பொறுப்பாளன்'' என்று (மூஸா) கூறினார். (அல்குர்ஆன் 28:22 - 28)
நபித்துவம் வழங்கப்படுதல்
மூஸா அந்தக் காலக்கெடுவை முடித்து, தமது குடும்பத்தாருடன் இரவில் பயணம் மேற்கொண்ட போது தூர் மலையின் திசையில் ஒரு நெருப்பைக் கண்டார். ''இருங்கள்! நான் ஒரு நெருப்பைக் கண்டேன். அது பற்றிய செய்தியையோ அல்லது நீங்கள் குளிர் காய்வதற்காக அதில் பந்தத்தையோ கொண்டு வருகிறேன்'' என்று தமது குடும்பத்தாரிடம் கூறினார்.
அவர் அங்கே வந்த போது பாக்கியம் பெற்ற இடத்தில், வலப்புறத்தில் இருக்கும் ஓடையில் உள்ள மரத்திலிருந்து ''மூஸாவே! நான் தான் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்'' என்று அழைக்கப்பட்டார். (அல்குர்ஆன் 28:29 - 30)
---- தொடரும் 
நன்றி: ஏகத்துவம் மாத இதழ்
No comments:
Post a Comment