” ஏகத்துவம் மாத இதழில் முன்பு வெளியான கட்டுரையினை வாசகர்களுக்காக இப்போது இங்கே வெளியிடுகிறோம்”
இரு பெரும் அற்புதங்கள்
உமது கைத்தடியைப் போடுவீராக! (என்றான்) அதைச் சீறும் பாம்பாகக் கண்ட போது திரும்பிப் பார்க்காது பின்வாங்கி ஓடினார். ''மூஸாவே! முன்னே வாரும்! அஞ்சாதீர்! நீர் அச்சமற்றவராவீர்.''
உமது கையை உமது சட்டைப் பைக்குள் நுழைப்பீராக! எவ்விதத் தீங்கு மின்றி வெண்மையாக அது வெளிப்படும். பயத்தின் போது உமது விலாப்புறத்தை ஒடுக்கிக் கொள்வீராக! இவ்விரண்டும் உம் இறைவனிடமிருந்து ஃபிர்அவ்னுக்காகவும், அவனது சபையோருக்காகவும் உள்ள இரண்டு சான்றுகள். அவர்கள் குற்றம் புரியும் கூட்டமாக உள்ளனர்.
''என் இறைவா! அவர்களில் ஓர் உயிரைக் கொன்று விட்டேன். எனவே அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என அஞ்சுகிறேன்'' என்று அவர் கூறினார்.
''என் சகோதரர் ஹாரூன் என்னை விட தெளிவாகப் பேசுபவர். எனவே அவரை என்னுடன் உதவியாக அனுப்பி வை! அவர் என்னை உண்மைப் படுத்துவார். என்னை அவர்கள் பொய்யெரெனக் கருதுவார்கள் என்று அஞ்சுகிறேன்'' (என்றும் கூறினார்). (அல்குர்ஆன் 28:31-34)
அநியாயக்காரனிடம் அழைப்புப்பணி
தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்த போது (நடந்ததை) இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! ''மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே நான் கருதுகிறேன்'' என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன் கூறினான்.
''இவற்றை வானங்களுக்கும், பூமிக்கும் அதிபதியே சான்றுகளாக அருளியுள்ளான் என்பதை நீ அறிந்திருக்கிறாய். ஃபிர்அவ்னே! நீ அழிக்கப்படுபவன் என்றே நான் கருதுகிறேன்'' என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 17:101 - 102)
''மூஸாவே! உங்களிருவரின் இறைவன் யார்?'' என்று அவன் கேட்டான்.
''ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி பின்னர் வழி காட்டியவனே எங்கள் இறைவன்'' என்று அவர் கூறினார்.
''முந்தைய தலைமுறையினரின் நிலை என்ன?'' என்று அவன் கேட்டான்.
''அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் (உள்ள) பதிவேட்டில் இருக்கிறது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்'' என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 20:49 - 52)
''இவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார். உங்கள் பூமியிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்?'' என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர். (அல்குர்ஆன் 7:104 - 110)
இஸ்லாத்தை ஏற்ற சூனியக்காரர்கள்
சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்தனர்.
''அகிலத்தாரின் இறைவனாகிய மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்'' என்றும் கூறினர்.
''நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? இது, இந்த நகரத்திருந்து அதன் உரிமையாளர்களை வெளியேற்று வதற்காக இங்கே நீங்கள் நிகழ்த்திய சதி. (இதன் விளைவை) அறிந்து கொள்வீர்கள்!'' என்று ஃபிர்அவ்ன் கூறினான்.
''உங்களை மாறுகால் மாறுகை வெட்டுவேன். பின்னர் உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைவேன்'' (என்றும் கூறினான்) (அல்குர்ஆன் 7:120 - 124)
அல்லாஹ் வழங்கிய அடுக்கடுக்கான சோதனைகள்
''படிப்பினை பெறுவதற்காகப் பல வகைப் பஞ்சங்களாலும் பலன்களைக் குறைப்பதன் மூலமும் ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தைத் தண்டித்தோம்''
அவர்களுக்கு ஏதேனும் நன்மை வந்தால் ''அது எங்களுக்காக (கிடைத்தது)'' எனக் கூறுகின்றனர். அவர்களுக்குத் தீங்கு ஏற்படுமானால் மூஸாவையும் அவருடன் உள்ளவர்களையும் பீடையாகக் கருதுகின்றனர். ''கவனத்தில் கொள்க. அவர்கள் பீடையாகக் கருதுவது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது. எனினும் அவர்களில் அதிகமானோர் இதனை அறிவதில்லை.''
''எங்களை வசியம் செய்வதற்காக நீர் எந்தச் சான்றைக் கொண்டு வந்த போதிலும், நாம் உம்மை நம்பப் போவதில்லை'' என்று அவர்கள் கூறினர்.
எனவே அவர்களுக்கு எதிராக வெள்ளப்பெருக்கு, வெட்டுக்கிளி, பேன், தவளைகள், இரத்தம் ஆகிய தெளிவான சான்றுகளை அனுப்பினோம். அவர்கள் ஆணவம் கொண்டனர். குற்றம் புரிந்த கூட்டமாகவே இருந்தனர்.
அவர்களுக்கு எதிராக, வேதனை வந்த போதெல்லாம் ''மூஸாவே! உமது இறைவன் உம்மிடம் தந்த வாக்குறுதியின் படி அவனிடம் பிரார்த்திப்பீராக! எங்களை விட்டு இந்த வேதனையை நீர் நீக்கினால் உம்மை நம்புவோம். உம்முடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி வைப்போம்''என்று அவர்கள் கூறினர்.
அவர்கள் அடைந்து கொள்ளக் கூடிய காலக் கெடு வரை அவர் களுக்கு நாம் வேதனையை நீக்கிய உடனே அவர்கள் வாக்கு மாறினர். (அல்குர்ஆன் 7:130 - 135)
மூஸா நபியும் பனூ இஸ்ரவேலர்களும்
ஃபிர்அவ்ன், தங்களைத் துன்புறுத்துவான் என அவனுக்கும், அவனது சபையோருக்கும் பயந்ததால் அவரது சமுதாயத்தில் சிறு பகுதியினரைத் தவிர மற்றவர்கள் மூஸாவை நம்பவில்லை. ஏனெனில் ஃபிர்அவ்ன் அப்பூமியில் வலிமையுள்ளவன்; வரம்பு மீறுபவன்.
''என் சமுதாயமே! நீங்கள் அல்லாஹ்வை நம்பி, முஸ்ம்களாக இருந்தால் அவனையே சார்ந்திருங்கள்!'' என்று மூஸா கூறினார்.
''அல்லாஹ்வையே சார்ந்து விட்டோம். எங்கள் இறைவா! அநீதி இழைத்த கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கி விடாதே!'' என்று அவர்கள் கூறினர்.
''உனது அருளால் (உன்னை) மறுக்கும் கூட்டத்திடமிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!'' (என்றும் கூறினர்)
''இருவரும், உங்கள் சமுதாயத்துக்காக எகிப்து நகரில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்! உங்கள் வீடுகளை ஒன்றையொன்று எதிர் நோக்கும் வகையில் ஆக்குங்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! நம்பிக்கை கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!'' என்று மூஸாவுக்கும் அவரது சகோதரருக்கும் தூதுச் செய்தி அறிவித்தோம்.
''எங்கள் இறைவா! ஃபிர்அவ்னுக்கும், அவனது சபையோருக்கும் இவ்வுலக வாழ்க்கையில் அலங்காரத்தையும், செல்வங்களையும் அளித்திருக்கிறாய்! எங்கள் இறைவா! உன் பாதையிலிருந்து அவர்களை வழி கெடுக்கவே (இது பயன் படுகிறது). எங்கள் இறைவா! அவர்களின் செல்வங்களை அழித்து, அவர்களின் உள்ளங்களையும் கடினமாக்குவாயாக! துன்புறுத்தும் வேதனையைக் காணாமல் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்'' என்று மூஸா கூறினார்.
''உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டது. இருவரும் உறுதியாக நில்லுங்கள்! அறியாதோரின் பாதையை இருவரும் பின்பற்றாதீர்கள்!'' என்று (இறைவன்) கூறினான். (அல்குர்ஆன் 10:83 - 89)
நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான். (அல்குர்ஆன் 79:24)
நம்மிடமிருந்து அவர்களிடம் உண்மையை அவர் கொண்டு வந்த போது ''இவரை நம்பியோரின் ஆண் மக்களைக் கொன்று விடுங்கள்! அவர்களின் பெண்களை உயிருடன் விட்டு விடுங்கள்!'' எனக் கூறினர். (நம்மை) மறுப்போரின் சூழ்ச்சி தவறிலேயே முடியும்.
''மூஸாவைக் கொல்வதற்கு என்னை விட்டு விடுங்கள்! அவர் தனது இறைவனை அழைக்கட்டும். உங்கள் மார்க்கத்தை அவர் மாற்றி விடுவார் என்றும் பூமியில் குழப்பத்தைத் தோற்றுவிப்பார் என்றும் அஞ்சுகிறேன்'' என்று ஃபிர்அவ்ன் கூறினான்.
''விசாரிக்கப்படும் நாளை நம்பாத ஒவ்வொரு அகந்தை கொண்டவனை விட்டும் உங்கள் இறைவனிடமும், எனது இறைவனிடமும் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று மூஸா கூறினார். (அல்குர்ஆன் 40:23-27)
இறைத்தூதருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த இறை நம்பிக்கையாளர்
''என் இறைவன் அல்லாஹ்வே'' என்று கூறும் ஒரு மனிதரைக் கொல்லப் போகிறீர்களா? உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகளை அவர் உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவர் பொய்யராக இருந்தால் அவரது பொய் அவரையே சேரும். அவர் உண்மையாளராக இருந்தால் அவர் உங்களுக்கு எச்சரிப்பதில் ஏதேனும் உங்களுக்கு ஏற்பட்டு விடும். வரம்பு மீறும் பெரும் பொய்யருக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்'' என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தினரில் தனது நம்பிக்கையை மறைத்துக் கொண்டிருந்த நம்பிக்கை கொண்ட ஒருவர் கூறினார்.
''என் சமுதாயமே! இன்றைய தினம் ஆட்சி உங்களிடமே இருக்கிறது. பூமியில் மிகைத்து இருக்கிறீர்கள். அல்லாஹ்வின் வேதனை நமக்கு வந்து விடுமானால் அதிருந்து நம்மைக் காப்பாற்றுபவன் யார்?'' (எனவும் அவர் கூறினார்) அதற்கு ஃபிர்அவ்ன் ''நான் (சரி) காண்பதையே உங்களுக்குக் காட்டுகிறேன். நேரான வழியைத் தவிர (வேறு எதையும்) நான் உங்களுக்குக் காட்டவில்லை'' என்று கூறினான்.
என் சமுதாயமே! மற்ற சமுதாயத்தினரின் கதியைப் போன்றும், நூஹுடைய சமுதாயம், ஆது சமுதாயம், ஸமூது சமுதாயம் மற்றும் அவர்களுக்குப் பின் வந்தோருக்கு ஏற்பட்ட கதி போன்றும் உங்கள் விஷயத்திலும் நான் அஞ்சுகிறேன் என்று நம்பிக்கை கொண்ட (அந்த) மனிதர் கூறினார். அல்லாஹ் அடியார்களுக்கு அநியாயத்தை நாடுபவன் இல்லை.
என் சமுதாயமே! அழைக்கப்படும் நாளை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்.
அந்நாளில் புறங்காட்டி ஓடுவீர்கள். அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காப்பவன் இருக்க மாட்டான். யாரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விட்டானோ அவனுக்கு நேர் வழி காட்டுபவன் இல்லை.
முன்னர் யூஸுஃப் உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவர் உங்களிடம் கொண்டு வந்ததில் சந்தேகத்திலேயே இருந்தீர்கள். அவர் மரணித்ததும் ''இவருக்குப் பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்'' எனக் கூறினீர்கள். வரம்பு மீறி சந்தேகம் கொள்பவனை அல்லாஹ் இப்படித் தான் வழி கெடுக்கிறான்.
அவர்கள் தங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்காமல் அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்கின்றனர். அல்லாஹ்விடமும், நம்பிக்கை கொண்டோரிடமும் இது பெரும் கோபத்தை ஏற்படுத்தக் கூடியது. இவ்வாறே பெருமையடித்து அடக்கியாளும் ஒவ்வொரு உள்ளத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிடுகிறான்.
''ஹாமானே! எனக்காக உயர்ந்த கோபுரத்தை எழுப்பு! வழிகளை, வானங்களின் வழிகளை அடைந்து மூஸாவின் இறைவனை நான் பார்க்க வேண்டும். அவரைப் பொய் சொல்பவராகவே நான் கருதுகிறேன்'' என்று ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அழகாக்கிக் காட்டப் பட்டது. (நேர்) வழியை விட்டும் அவன் தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அழிவில் தான் முடிந்தது.
''என் சமுதாயமே! என்னைப் பின்பற்றுங்கள்! உங்களுக்கு நேர் வழி காட்டுகிறேன்'' என்று நம்பிக்கை கொண்ட ஒருவர் கூறினார்.
''என் சமுதாயமே! இவ்வுலக வாழ்க்கை அற்ப சுகமே. மறுமையே நிலையான உலகம்.''
யாரேனும் ஒரு தீமையைச் செய்தால் அது போன்றதைத் தவிர அவர் கூ கொடுக்கப்பட மாட்டார். ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டவராக நல்லறம் செய்வோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். அதில் கணக்கின்றி வழங்கப்படுவார்கள்.
என் சமுதாயமே! எனக்கென்ன? நான் உங்களை வெற்றிக்கு அழைக்கிறேன். நீங்களோ என்னை நரகிற்கு அழைக்கிறீர்கள்.
''நான் அல்லாஹ்வை மறுத்து எனக்கு அறிவில்லாத ஒன்றை அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்க வேண்டும்'' என்று என்னை அழைக்கிறீர்கள். நானோ உங்களை மிகைத்தவனாகிய மன்னிப்பவனிடம் அழைக்கிறேன்.
என்னை எதை நோக்கி அழைக்கிறீர்களோ அதற்கு இவ்வுலகிலும் மறுமையிலும் பிரார்த்திக்கப்படும் தகுதி இல்லை என்பதிலும், நாம் திரும்புவது அல்லாஹ்விடமே என்பதிலும், வரம்பு மீறுவோர் தான் நரகவாசிகள் என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை.
நான் உங்களுக்குக் கூறுவதைப் பின்னர் உணர்வீர்கள்! எனது காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன். அல்லாஹ் அடியார்களைப் பார்ப்பவன். (என்றும் அவர் கூறினார்) (அல்குர்ஆன் 40:28 - 44)
---- தொடரும் இன்ஷா அல்லாஹ்.....
நன்றி: ஏகத்துவம் மாத இதழ்
No comments:
Post a Comment